“This is a dedication to all the grandmothers of the world…the book has eye catching photos…one of the authors is into Kathak & the other philosophy; and together they write good cookbooks,” says Kungumam – Tamil magazine. The magazine interviewed the author-duo of “Cooking at Home with Pedatha” when their cookbook won the international award – Gourmand Award for Best Vegetarian Cookbook in the World.

Here is a transcript of the article:
கதக் + தத்துவம் = சமையல்?
கொஞ்சம் புரியாத கணக்கு தான் ஆனாலும், தப்பாகிப் போகாத கணக்கு.
கதக் நடன கலைஞரான ஜிக்யாசா கிரியும், தத்துவம் படித்தவரான பிரதீபா ஜெயினும் இன்று உலகப் பிரபலம். அதற்கு நடனமோ, தத்துவமோ காரணமில்லை. தற்செயலாக அவர்கள் எழுதித் தொகுத்து வெளியிட்ட ஒரு சமையல் புத்தகம் தான் காரணம்!
ஆந்திரா சைவ உணவுகளைப் பற்றி இவர்கள் எழுதியுள்ள “குக்கிங் அட் ஹோம் வித் பெதத்தா” என்ற புத்தகத்துக்கு, உலகின் மிகச் சிறந்த சைவ உணவுப் புத்தகம் என்ற விருது கிடைத்திருக்கிறது . மிக உயரிய ‘கோர்மண்ட்’ விருதைத் தட்டி வந்திருக்கிற இந்தப் புத்தகம், இதற்கு முன்பே சிறந்த சமையல் புத்தக டிசைன், சிறந்த சமையல் புத்தக புகைப்படம், சிறந்த சமையல் புத்தக அட்டை படம், சிறந்த உள்ளூர் சமையல் புத்தகம், சிறந்த முதல் சமையல் புத்தகம் என வேறு சில விஷயங்களுக்கான ‘கோர்மண்ட் இந்திய’ விருதையும் வென்றிருக்கிறது.
சீனாவில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரமிப்பிலிருந்து மீளாமல் பேசுகிறார்கள் ஜிக்யாசாவும், பிரதீபாவும்.
“நான் ஒரு கதக் டான்சர். குஜராத்தியான நான், கல்யாணம் பண்ணினது ஆந்திரக் குடும்பத்தில. என் கணவரோட பெதத்தா, அதாவது பெரிய அத்தை சுபத்ரா கிருஷ்ண ராவ் பரிகி. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியோட மூத்த மகள் அவங்க. பெதத்தாவுக்கு இப்ப 86 வயசு. என் கல்யாணத்துக்குப் பிறகு ஆந்திரா சமையல் மேல ஆர்வம் வந்தது. வீட்ல யாரை பார்த்தாலும் பெதத்தா புராணம் பாடுவாங்க. சமையல்னா அது பெதத்தா செய்யறதுதான். கத்துக்கிட்டா அவங்கக் கிட்டா தான் கத்துக்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. நான் இருந்ததோ சென்னைல. பெதத்தா பெங்களூர்ல இருதாங்க. கதக் கதுக்கிறதுக்காக அடிக்கடி பெங்களூர் போவேன். என் ஃப்ரெண்ட் பிரதீபா பிலாசஃபில பிஹெச்.டி பண்ணிடிருதாங்க. படிப்புக்காக அவங்களும் அடிக்கடி பெங்களூர் போய் வந்தாங்க. தத்தனியா போயிட்டிருந்த நாங்க, சேர்ந்து போக ஆரம்பிச்சோம். அப்படி ஒரு விசிட்ல தான் பெதத்தாவை சந்திச்சோம்” என்று நிறுத்துகிற ஜிக்யாசாவைத் தொடர்கிறார் பிரதீபா ஜெயின்.
“பெதத்தாவோட ஸ்பெஷல் வாங்கிபாத். அதாவது கத்திரிக்காய் சாதம். முதல் முறை சந்திச்சப்ப அவங்க கையால வாங்கிபாத் செய்து எங்களுக்கு ஊட்டினாங்க. அப்படியொரு அயிட்டத்தை அதுவரை நாங்க டேஸ்ட் பண்ணினதில்லை. அதோட ரெசிபியைக் கேட்டு, லாப்டாப்ல குறிச்சிக்கிட்டோம். பொதுவா ஆந்திரா சமையல்ல நெய்யும், காரமும் தூக்கலா இருக்கும். அததை பத்தி பெதத்தாகிட்ட கேட்டோம். ‘நீங்கல்லாம் இன்னிக்குப் பார்த்து பார்த்து சாப்பிடறீங்க. அந்தக் காலத்தில அதுக்கெல்லாம் அவசியமிருந்ததில்லை. இந்த வயசுலயும் என் தலைல எவ்ளோ முடி இருக்கு பாருங்க. பல் எல்லாம் எவ்ளோ உறுதியா இருக்கு பாருங்க’னு வியக்கவச்சாங்க. அப்புறம் பெங்களூர் போனப்பல்லாம் பெதத்தாகிட்டருந்து சமையல் குறிப்பு கேட்டு குறிச்சுக்கிறது வழக்கமாச்சு. அப்படி ஆரம்பிச்ச பயணம் தான். இன்னிக்கு இத்தனை தூரத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கு” என்கிறார் பிரதீபா.
இவர்கள் தொகுத்து வைத்திருந்த சமையல் குறிப்புகளைப் பார்த்த பிரதீபாவின் அண்ணன், அவற்றை புத்தகமாக வெளியிடும் ஐடியாவைத் தர, அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் தோழிகள்.
“ப்ரித்யா” என்ற பெயர்ல பதிப்பகம் தொடங்கி, நாங்க நினைச்ச மாதிரியே வெளியிட்டோம். இந்த புத்தகம் விருது வரைக்கும் போகும்னு நினைக்கலை. ‘கோர்மண்ட்’ அவார்டு’ங்கிறது சமையல் புத்தகங்களுக்கான ஆஸ்கர் விருது மாதிரி. கிட்டதிட்ட 40 மொழிகள்ல 90 நாடுகள்லேர்ந்து விருது தேவுக்குப் புத்தகங்கள் குவியும். அத்தனைலேர்ந்தும் எங்க புத்தகம் சிறந்ததா தேர்வு செய்யப்பட்டிருக்குங்கிற தகவல் இப்ப கூட ஆச்சிரியமாதான் இருக்கு” என்று பூரிக்கிறார்கள் ஜிக்யாசாவும், பிரதீபாவும்.
ஆந்திர சட்னி, பொடி, சாத வகைகள், இனிப்புகள், வறுவல் என மொத்தம் 60 அயிட்டங்களின் குறிப்புகள், மிக எளிய முறையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன இந்த புத்தகத்தில், கூடவே கண்களுக்கு விருந்தளிக்கும் படங்கள்!
“வீட்ல இருக்கற பெரியவங்களோட அனுபவங்களையும், அவங்ககிட்டருந்து கத்துக்க வேண்டிய விஷயங்களையும் பலரும் மிஸ் பண்ணிடறாங்க. பெதத்தாவோட செலவழிச்ச ஒவ்வொரு நிமிஷமும் எங்களுக்குப் பொக்கிஷம். இந்தப் புத்தகத்தை உலகத்திலுள்ள அத்தனை பாட்டிகளுக்கும் காணிக்கை ஆக்கறோம் ” என்கிறார்கள் இருவரும்.
(As appeared in Kungumam Tamil magazine – May 17, 2007)
Related posts:



